கோலாலம்பூர். பிப் 17 – தாம் பிரதமராக பதவியேற்றவுடன் அம்னோவின் தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடியும், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பும் தனித்தனியாக சந்தித்து நீதிமன்ற வழக்கு விசாரணையில் உதவும்படி கோரிக்கை விடுத்தனர். தாம் அவர்களுக்கு உதவ முடியாது என திட்டவட்டமாக அவர்களிடம் கூறிவிட்ட தகவலை நேற்றிரவு தங்காக்கில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோது பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அம்பலப்படுத்தினார்.
என்னை பார்க்க வந்த ஸாஹிட் கோப்புகளை உடன் கொண்டு வந்தார். இது என்ன என்று வினவப்பட்டபோது நீதிமன்ற வழக்கு தொடர்பான கோப்பு என்றும் , தாம் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்பதால் நீதிமன்ற வழக்கு விசாரணையில் உதவும்படி ஸாஹிட் ஹமிடி கோரிக்கை விடுத்தார்.
நீங்கள் தவறு செய்யவில்லை என்றால் நீதிமன்ற வழக்கு விசாரணை மூலமாகவே அதனை நிருபியுங்கள் என்று ஸாஹிட் ஹமிடியிடம் தாம் மறுமொழி தெரிவித்தாக முஹிடின் கூறினார். நான் பிரதமர் ஆனவுடன் மரியாதை நிமித்தமாக வாழ்த்து தெரிவிக்க நஜீப் வந்தார். முடிந்தால் தமக்கு எதிரான நீதிமன்ற வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் கோபால் ஸ்ரீ ராமை நீக்கும்படி அவர் கோரிக்கை விடுத்தார்.
அந்த இருவரிடமும் நீதிமன்ற வழக்கு விசாரணையில் தாம் தலையிட முடியாது என திட்டவட்டமாக கூறியதாகவும் முஹிடின் யாசின் தெரிவித்தார். நீதிமன்ற விசாரணையில் தலையிடும்படி தாம் முஹிடின் யாசினிடம் கேட்கவில்லையென்றும் அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப் போவதாகவும் ஏற்கனவே நஜீப் கூறியிருந்தார்.