
திண்டுக்கல், ஆகஸ்ட் 5 – தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் நீர்வீழ்ச்சி அருகே நின்றபடி கைப்பேசியில் வீடியோ எடுக்க முயன்ற 26 வயது இளைஞர், தவறி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
அஜய் பாண்டியன் எனும் அவ்விளைஞரைத் தேடும் பணியில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தின் போது ராமநாதபுர மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த அஜய் பாண்டியன், தனது நண்பருடன் சேர்ந்து புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்குச் சென்றுள்ளார். அங்கு தம்மை வீடியோ எடுக்கும்படி தன் நண்பரிடம் கூறி விட்டு, நீர்வீழ்ச்சியின் பாறை ஓரத்தில் நின்ற போது அஜய் பாண்டியன் வழுக்கி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நீர்வீழ்ச்சி மிகவும் ஆபத்தானது எனக் கூறியிருக்கும் அப்பகுதி மக்கள், இளைஞர்கள் பலர் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க இங்கு வரும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்து இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு எனத் தெரிவித்தனர். இப்பகுதியில் போலீஸ் சோதனைச் சாவடி உள்ள போதிலும் பெரும்பாலான சமயங்களில் அங்கு யாரும் காவலுக்கு இருப்பதில்லை என்றும் ஊர் மக்கள் குறைபட்டுக் கொண்டனர்.