குவந்தான், ஆகஸ்ட் 20 – நேற்று பூங்கா செங்கே (Bunga Cengkih) மேம்பாலம் அருகே ஜாலான் பிண்தாசான் (Jalan Pintasan) குவந்தானில், நீர் பாய்ச்சும் லோரியை பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியதில், போலிடெக்னிக் மாணவர் ஒருவர் அகால மரணம் அடைந்தார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சுல்தான் ஹாஜி அகமது ஷா போலிடெக்னிக் (Politeknik Sultan Haji Ahmad Shah) சேர்ந்த மாணவன் உயிரிழந்த நிலையில், அவருடன் பயணம் செய்த மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவன் காயங்களுடன் உயிர் தப்பினார்.
குவந்தான் மாநகர மன்றத்தின் நீர் பாய்ச்சும் அந்த லோரியானது, மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காகத் தண்ணீரை ஏற்றிக்கொண்டு வலது பாதையில் சென்று கொண்டிருந்திருந்த போது, அந்த 19 வயதான மாணவர்கள் வந்த Yamaha வண்டி பின்புறத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என குவந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவரும், உதவி ஆணையருமான வான் முகமட் ஜஹாரி வான் புசு (Wan Mohd Zahari Wan Busu) தெரிவித்தார்.