தஞ்சோங் மாலிம், ஆகஸ்ட்-24 – பேராக், சிலிம் ரிவர், கம்போங் உலு சிலிமில் நீர் பெருக்கு ஏற்பட்டு அணைக்கட்டு உடைந்ததால் Risda Eco-Park பூங்காவில் சிக்கிக் கொண்ட 19 பேரை மீட்கும் பணிகள் இன்று காலை தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 10 பேர் பெரியவர்கள், 9 பேர் சிறார்கள் என தீயணைப்பு மீட்புத் துறை கூறியது.
அவர்கள் அனைவரும் தத்தம் கூடாரங்களில் பாதுகாப்பாக இருப்பதும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
அப்பூங்காவுக்குச் செல்வதற்கான பாலம் நேற்றிரவு இடிந்து விழுந்து விட்டது.
கனமழையால் பெருக்கெடுத்து ஓடிய ஆற்று நீரும் இன்னும் வடியவில்லை.
ஆற்றைக் கடக்க வேறு வழியும் இல்லை.
எனவே, நிலைமை பாதுகாப்பாக இருப்பதாக தெரிய வந்தவுடன் அவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்படுமென பேராக் தீயணைப்பு மீட்புத் துறை கூறியது.
அப்பூங்கா, இடிந்து விழுந்த பாலத்திலிருந்து 800 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.