
கோலாலம்பூர், ஏப்.1- நீல நிற அடையாள அட்டையைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிவப்பு, பச்சை நிற அடையாள அட்டையை கொண்டிருப்பவர்களின் பிரச்சினைகளை உள்துறை அமைச்சு விரைந்து தீர்க்க வேண்டும் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். மலேசியாவில் பிறந்து நீல நிற அடையாள அட்டையைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருபவர்களின் நிலை உணர்ந்து பேசிய டத்தோ ரமணன், குடிமக்கள் என்ற அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் அவர்கள் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சு இவ்விவகாரத்திற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.
நாடற்ற குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கல்வி விவகாரம் தொட்டு பேசிய அவர் கூட்டரசு அரசியலமைப்பு சட்டவிதியும் 1952ஆம் ஆண்டு தத்தெடுப்பு சட்டமும் மீண்டும் திருத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் பி’ தர நிலை வழங்கப்பட்டுள்ள சுங்கை பூலோ போலீஸ் தலைமையகத்தின் குறைவான அடிப்படை வசதிகளும் ஆள்பல பற்றாக்குறை பிரச்னைக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என ரமணன் அறைகூவல் விடுத்தார். ஆள்பல பற்றாக்குறையினால் இங்கு சட்ட ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்டுவதில் போலீஸ் தரப்புக்கு சிரமம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அதனை தீர்ப்பதற்கான வழிவகை உடனடியாகக் காணப்பட வேண்டும் என பி.கே.ஆர் கட்சியின் தகவல் பிரிவு தலைவருமான டத்தோ ரமணன் உள்துறை அமைச்சை கேட்டுக்கொண்டார்.