
கோலாலம்பூர், ஜன 31 – தமது மகள் நுருல் இஷாவை தமது முதன்மை ஆலோசகராக நியமித்ததை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தற்காத்திருக்கிறார். இந்த நியமனத்தில் வேண்டிய சொந்தத்தை நியமித்துள்ளேன் என்ற விவகாரம் எழுவில்லையென அவர் தெரிவித்தார். அதிகாரத்தை மீறும் வகையில் ஒரு பதவியை கொடுத்திருந்தால் அதனை வேண்டியவருக்கு கொடுத்ததாக கூறலாம். ஆனால் தமது முதன்மை ஆலோசகராக நுருல் இஷாவை நியமித்ததில் நெருங்கிய குடும்ப உறவுக்காகத்தான் அந்த பொறுப்பு கொடுத்ததாக அர்த்தமில்லையென அன்வார் கூறினார்.
அவரை வளப்படுத்திக் கொள்வதற்காகவோ, குத்தகைகளை பெறுவதற்கோ அல்லது பெரிய அளவில் சம்பளம் கொடுத்து வைத்திருந்தால் வேண்டியவருக்கு பதவி கொடுத்துவிட்டேன் என்று கூறலாம். ஆனால் நுருல் இஷாவின் நியமனம் அந்த அடிப்படையில் இல்லையென தேசிய விளையாட்டு மன்றத்தில் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அன்வார் தெரிவித்தார்.