சிரம்பான், ஆகஸ்ட் 21 – நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள அனைத்து பல்பொருள் அங்காடிகள் மற்றும் விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நெகிழிப் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்க அனுமதி இல்லை.
இந்நிலையில், மக்கும் வகையிலான நெகிழிப் பைகளுக்கும் கட்டணம் விதிக்க தடைதான் என்று அம்மாநில உள்ளாட்சி மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்துக் குழுவின் தலைவர் அருள் குமார் தெரிவித்தார்.
அனைத்து மாநிலங்களுக்கும், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பை, பாலிஸ்டிரீன் (polystyrene) மற்றும் உறிஞ்சு குழாய் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான தடை அக்டோபர் 2020ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு விட்டது.
இருப்பினும், வணிக உரிமம் கொண்ட விற்பனையாளர்களே தானாக முன்வந்து வழங்கும் மக்கும் வகை நெகிழிப் பைகளுக்குத் தடை விதிக்கப்படவில்லை; ஆனால் அப்படி வழங்கும் பைகளுக்கும் கட்டணம் விதிக்க முடியாது என அவர் கூறினார்.
இதனிடையே, வணிக உரிம விண்ணப்பங்களுக்கு, நெகிழிப் பைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடாது என்ற நிபந்தனையை 2022ஆம் ஆண்டு முதல், மாநில அரசாங்கம் விதித்திருக்கிறது.
எனினும், பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் இந்த விதிமுறையை மீறி இதுவரை 1,125 எச்சரிக்கை நோட்டீஸ்களைப் பெற்றுள்ளதை அருள் குமார் சுட்டிக்காட்டினார்.