
செரம்பான் , ஜன 20 – வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், தென் மாநிலங்களை நோக்கி செல்லும் வழியில், நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சன் சாலை கட்டண சாவடிக்கு அருகே, Treler ஒன்று தீக்கிரையானதில், அதன் ஓட்டுனரும், உதவியாளரும் கருகி மாண்டதாக நம்பப்படுகிறது.
இன்று காலை மணி 8.40 வாக்கில் நிகழ்ந்த அவ்விபத்தால், போக்குவரத்து தடைப்பட்டதோடு, ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது.
காலை மணி 8.42 வாக்கில், அவ்விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்த பின்னரே அதில் கருகிய நிலையில் இருவரது சடலம் இருப்பதை கண்டதாக, நெகிரி செம்பிலான் தீயணைப்பு மீட்புத் துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அவ்விருவரின் உடல்களும் 100 விழுக்காடு கருகி போயிருப்பதால், அவர்கள் குறித்த விவரம் எதுவும் இதுவரை தெரியவில்லை எனவும் அவர் சொன்னார்.
காலை மணி 11.30 மணி வாக்கில், தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், நெரிசலை தவிர்க்க வாகனங்கள் மாற்று வழிக்கு திசை திருப்பி விடப்பட்டுள்ளதாக, மலேசிய நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்தது.