
காத்மாண்டு, ஜன 16 – நேப்பாளம் , Pokhara நகரில், புதிதாக திறக்கப்பட்ட விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, உள்ளூர் விமானம் ஒன்று, திடீரென பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியதில் 68 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 30 ஆண்டு காலத்தில் நிகழ்ந்த அந்த மோசமான விமான விபத்தின்போது, விமானத்தில் 72 பேர் பயணமாகியதாக அந்நாட்டு அதிகாரத்துவ தரப்பு கூறியது.
பள்ளத்தின் விளிம்பில் மாட்டிக் கொண்ட , நொறுங்கிய விமான பாகங்களில் இருந்து , உடல்களைக் கையிற்றினால் கட்டி மீட்பு படையினர் வெளியே கொண்டு வந்தனர். சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு தீயில் கருகி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் விபத்துக்குள்ளான காரணம் உடனடியாக தெரிய வராத நிலையில், தரையிறங்கும் சமயம் அந்த விமானம் உயரத்தில் கட்டுப்பாடின்றி சுழன்றதாக சாட்சியாளர் ஒருவர் தெரிவித்தார்.