லாகோஸ், டிசம்பர்-20, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளியில் நடைபெற்ற கேளிக்கைக் கண்காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 35 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அறுவர் படுகாயம் அடைந்திருப்பதாக போலீஸ் கூறியது.
100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அப்பள்ளியில், கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் ஆண்டு நிறைவையொட்டி நேற்று முன்தினம் கேளிக்கை விழாவும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அதில் மாணவர்களின் குடும்பத்தினரும் திரளாகப் பங்கேற்ற நிலையில், கிறிஸ்மஸ் பரிசு பொருட்களைக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியை காணவும், பரிசுப் பொருட்களை வாங்கவும் கூட்டம் அலைமோதியதில், பலர் மிதியுண்டும் மூச்சுத் திணறியும் உயிரிழந்ததாக தொடக்கக் கட்ட விசாரணைத் தெரிவிக்கிறது.
இதையடுத்து விசாரணைக்காக 8 பேர் கைதாகியுள்ளனர்.
கண்காட்சி ஏற்பாட்டுக்கான முதன்மை நிதி ஆதரவாளரும் அவர்களில் அடங்குவார்.