Latestஉலகம்

நைஜீரிய மாணவரின் மரணத்திற்கு அதிகாரிகளின் அலட்சியம் காரணமல்ல; கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 30- மூன்றாண்டுகளுக்கு முன்பு குடிநுழைவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நைஜீரிய மாணவர் ஒருவர் உயிரிழந்ததற்கு, அதிகாரிகளின் அலட்சியப்போக்கு காரணமல்ல என்ற மரண விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியுள்ளது.

2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் புக்கிட் ஜாலில் குடிநுழைவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது ஓரியோன்ஸ் எவான்சிஹா தோமஸ் (Orhions Ewansiha Thomas) எனும் அந்த PhD மாணவர் உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்பு தோமஸுக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் குடிநுழைவுத் துறையினர் தெரிவித்திருந்தனர்.

ஆனால் தோமஸ் உடல்நலம் குன்றியிருந்த போது அதிகாரிகள் அலட்சியமாக இருந்து, அவருக்கு சரியான சிகிச்சைகளை வழங்க ஏற்பாடு செய்யவில்லை என தோமஸின் மனைவி கூறியிருந்தார். எனவே அதிகாரிகள் தவறாகச் செயல்படவில்லை என்பது போல் காட்டும் மரண விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரி தோமஸின் மனைவி மனுதாக்கல் செய்திருந்தார்.

அதனை விசாரித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், மரண விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது தான் எனக் கூறி, தீர்ப்பை மறு உறுதிப் படுத்தியது. அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்பட்டிருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதால் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!