ஓஸ்லோ, நவம்பர்-23, நோர்வே நாட்டின் பட்டத்து இளவரசி மெட்டே-மரிட்டின் (Mette-Marit) 27 வயது மகன் கற்பழிப்பு சந்தேகத்தின் பேரில் கைதான சில நாட்களிலேயே, இரண்டாவது கற்பழிப்புப் புகாரை எதிர்நோக்கியுள்ளார்.
இதையடுத்து மரியஸ் போர்க் ஹோய்பியை (Marius Borg Høiby) மேலுமிரு வாரங்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க, ஓஸ்லோ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
உடலுறவு அல்லாத பாலியல் செயல் என இந்த இரண்டாவது புகார் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நோர்வே குற்றவியல் சட்டத்தின் படி அக்குற்றத்திற்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
முதல் புகாரில், தன்னுடன் உறவிலிருந்த பெண்ணுக்கு உடல் ரீதியாக தீங்கு விளைவித்ததாக அவர் விசாரிக்கப்படுகிறார்.
நோர்வே பட்டத்து இளவரசர் ஹாகோனை (Haakon) 2001-ல் திருமணம் செய்வதற்கு முன், மெட்டேவுக்கும் மற்றொரு ஆடவருக்கும் பிறந்தவரே கைதாகியுள்ள இந்த மரியஸ் ஆவார்.
இதனால் நோர்வே சிம்சானத்திற்கான வாரிசாக அவர் கருதப்படமாட்டார்.
என்றாலும், தனது மாற்றான் மகன் மீதான புகாரும் விசாரணையும் அரச குடும்பத்தையும் பாதிக்கவே செய்யும் என்பதை, பட்டத்து இளவரசர் ஹாக்கோன் ஒப்புக் கொண்டார்.
முதன் முறையாக அவ்விவகாரம் குறித்து மௌனம் கலைந்த ஹாக்கோன், போலீசார் சுதந்திரமாக தங்கள் கடமையைச் செய்யலாமென்றார்.