மூவார், அக்டோபர்-17, ஜோகூர் மூவாரைச் சேர்ந்த மருத்துவர், இல்லாத ஒரு பகுதி நேர வேலையை நம்பி 100,000 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.
கைப்பேசி செயலியொன்றின் மூலமாக அறிமுகமானவரின் ஆசை வார்த்தைகளை நம்பி 27 வயது இளம் மருத்துவர் ஏமாந்து போயுள்ளார்.
எரிசக்தி ஆற்றலைக் கண்காணிப்பதே அந்த பகுதி நேர வேலையாம்.
கொடுக்கப்பட்ட link இணைப்பைத் தட்டி அந்த ‘கண்காணிப்பை’ முடித்தால் 20 விழுக்காடு கமிஷன் பார்க்கலாமென அவரிடம் கூறப்பட்டுள்ளது.
அதுவொரு கவர்ச்சிகரமான வாய்ப்பென நம்பிய அவ்வாடவர், இணையத் தளம் சென்று தன்னை ஒரு முகவராகப் பதிந்துகொண்டார்.
அந்த ‘கண்காணிப்பு’ வேலை சும்மா கிடைத்து விடுவதில்லை; அதைப் பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும்.
அவ்வாடவரும் சற்றும் யோசிக்காமல் கொடுக்கப்பட்ட 5 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 113,086 ரிங்கிட் பணத்தைப் போட்டுள்ளார்.
அதற்கு 130,000 ரிங்கிட் இலாபம் கிடைத்ததாக, செயலில் காட்டப்பட்டதால் அவருக்கு ஒரே மகிழ்ச்சி.
எனினும், அந்த இலாபத் தொகையை மீட்க வேண்டுமென்றால், மேலும் பணம் செலுத்த வேண்டுமெனக் கூறப்பட்ட போதே அவருக்கு சந்தேகம் வரத் தொடங்கியது.
இனியும் பணம் செலுத்த முடியாது எனக் கூறிவிட்டு அம்மருத்துவர் போலீசில் புகார் செய்தார்.
அவர் மோசம் போனது அத்தனையும் சேமிப்புப் பணமாகும்.