
கோலாலம்பூர், ஏப்ரல்-11,
ஓர் இந்துவான அண்டை வீட்டுக்காரர் அவரின் வீட்டு வளாகத்தில் சற்றே பெரிய அளவிலான வழிபாட்டு மேடையை அமைத்திருப்பது, தினமும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, முஸ்லீம் ஒருவரின் டிக் டோக் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
எல்லை சுவர் அருகே கட்டப்பட்டுள்ள அந்த வழிபாட்டு மேடையில் தினமும் காலை 6 மணி முதல் 9 வரையிலும், பின்னர் இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் மந்திரங்கள் ஓதப்படுகின்றன.
அதுவே பெரும் மன உளைச்சல் என்றால், சாம்பிராணி ‘வாடையை’ சொல்லவே வேண்டாம்; எங்கள் வீட்டுக்குள் புகுந்து ‘இம்சை’ தருகின்றது.
அந்த சாம்பிராணி ‘வாடை’ வீட்டுக்குள் வராமலிருக்க, 40,000 முதல் 50,000 ரிங்கிட் வரை செலவழித்து கண்ணாடி கதவை அமைத்தோம்.
ஆனால் நாளுக்கு நாள் எங்களின் மன உளைச்சல் அதிகரித்து வருகிறது; அவர்கள் மந்திரங்கள் ஓதுவதும் மணியடிப்பதும் எங்கள் காதுகளால் தாங்க முடியவில்லை;
இனி பக்கத்து வீட்டுக்காரர் யார் என்பதை தெரிந்துகொண்டுதான் வீடு வாங்க வேண்டும்; இல்லையென்றால் காலம் முழுக்க இப்படித் தான் ‘இம்சையை’ அனுபவிக்க வேண்டுமென அந்நபர் மறைமுகமாகத் தாக்கியிருக்கின்றார்.
ஆனால், அப்பதிவுக்கு அவர் எதிர்பார்த்த பதில்களை விட எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது நமக்கும் ஆச்சரியம் தான்.
ஏராளமான மலாய் – முஸ்லீம் அன்பர்கள், அந்த பக்கத்து வீட்டுக்கார இந்து குடும்பத்தை ஆதரித்தே பேசியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
“வீட்டு எல்லைக்குள் அவரின் தெய்வத்தை அவர் வழியில் அவர் வழிபடுகிறார்; அதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்ன?” என ஒரு மலாய் அன்பர் சொன்னார்.
இன்னொருவரோ “சாம்பிராணி வாசனை உங்களுக்கு வேண்டுமானால் ‘வாடையாகத்’ தெரியலாம்; எங்களுக்கு அதெல்லாம் பிரச்னை அல்ல” என்றார்.
மற்றொரு முஸ்லீம் சகோதரி,
“எனக்கு ஏராளமான இந்திய – இந்து நண்பர்கள் உள்ளனர்; எங்களுக்குள் பரஸ்பர மரியாதை உண்டு; பேதமெல்லாம் எங்களுக்கு இல்லை” எனக் கூறினார்.
கருத்துப் பதிவிட்ட பலரும், பன்முகத்தன்மைக் கொண்ட மலேசியாவில் அண்டை அயலாருடன் ஒன்றிப் பழகுவதன் அவசியத்தையும், பரஸ்பர மரியாதையுடன் விட்டுக் கொடுக்கும் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.
என்னதான் அவ்வப்போது ஆங்காங்கே சிறு சிறு உரசல்கள் ஏற்பட்டாலும், பல்லின – மதங்களைச் சேர்ந்த பெருவாரியான மக்களின் சகிப்புத் தன்மைக்கு நாம் தலை வணங்கியே ஆக வேண்டும் என்பதை, வலைத்தளவாசிகள் நிரூபித்துள்ளனர்.
TikTok, user, complains, Hindu, neighbour, prayer, chants, netizens, hit back, strong, reactions,