
ஈப்போ, பிப் 4 -புந்தோங் சுங்கை பாரி சாலையில் உள்ள அருள் மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்ட ரதம் இன்று அதிகாலை 2 மணிக்கு குனோங் சிரோவில் உள்ள அருள் மிகு சுப்பிரமணியர் ஆலயத்தை சென்றடைந்தது. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடைபெறும் ஈப்போ தைப்பூச திருவிழா ரதம் ஊர்வலத்தில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து ரதம் ஊர்வலம் புறப்பட்டபோது மழை பெய்தபோதிலும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
சில மணி நேரத்தில் மழை நின்றதும் இரதம் செல்லும் வழிநெடுகிலும் நூற்றுக்கான பக்தர்கள் திரண்டு முருகப் பெருமானுக்கு அர்ச்சனைகள் செய்தனர்.
சாலை யோரங்களில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் மூலம் பொது அமைப்புகள் பக்தர்களுக்கு குளிபானங்கள் மற்றும் உணவுகளை விநியோகம் செய்தனர். இந்திய வணிகர்களின் முக்கிய மையமாக விளங்கும் லிட்டில் இந்தியா வளாகத்தில் பெருங் கூட்டம் குவிந்ததைக் காணமுடிந்தது. ஈப்போ தைப்பூச விழாவில் சுமார் 4 லட்சம் பக்தர்கள்கள் திரள்வார்கள் என ஈப்போ இந்து தேவஸ்தான தலைவர் எம். விவேகனந்தா தெரிவித்தார்.