
கோலாலம்பூர், பிப்ரவரி 2 – லட்சக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள பங்களா வீடு தமக்கு சொந்தமெனக் கூறப்படுவதை , மூடா கட்சியின் தலைவர் சயிட் சாடிக் அப்துல் ரஹ்மான் மறுத்திருக்கின்றார். மாறாக, பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் போது, அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து, தாம் அந்த பங்களாவில் வாடகைக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஜோகூர் மாநிலத் தேர்தல் நெருங்கும் நிலையில், தம் மீது அவதூறுகள் சுமத்தப்படுவதாக , காணொளி வாயிலாக அவர் தெரிவித்துள்ளார். தம் மீது அவதூறு சுமத்துவதற்காக, அதிகம் செலவு செய்து ஸ்டூடியோ அரங்கில் காணொளி பதிவு செய்து வெளியிடும் அளவிற்கு சிலர் சிரத்தை எடுத்து செயல்படுவதாக , சயிட் சாடிக் சாடினார்.
சயிட் சாடிக் , அமைச்சராக இருந்தபோது தமது சொத்து மதிப்பு 7 லட்சத்து 22, 312 ரிங்கிட் என அறிவித்திருந்தார். அவ்வாறு இருக்கையில் , நீச்சள் குளத்துடன் பங்களா ஒன்று சயிட் சாடிக்கிற்கு சொந்தமானதா என Mario எனும் டிவிட்டர் கணக்கை கொண்டுள்ள நபர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சாடிக், அமைச்சராக இருந்தபோது முதல் நபராக சொத்து விபரங்களை அறிவித்தது நானே. புத்ராஜெயாவை ஒட்டிய நிலத்தையும் பங்களா வீட்டையும் நிராகரித்தேன். அதற்குப் பதிலாக பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து இன்று வரை அதில் தங்கி வருகிறேன் என அவர் கூறியுள்ளார். இதனிடையே, மூடா கட்சிக்கு முறையான அலுவலகம் இல்லாத பட்சத்தில் கட்சி சார்ந்த சந்திப்புகளையும் தாம் தமது பங்களா வீட்டில் தான் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், உண்மை தம் பக்கம் இருக்கும் நிலையில், அந்த பங்களா வீட்டு தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் தாம் தயாராக இருப்பதாக சயிட் சாடிக் கூறினார்.