பஞ்சாப், ஏப்ரல் 23 – இந்தியா, பாட்டீலாவிளுள்ள, மளிகைக் கடை ஒன்றிலிருந்து, தனது உறவினர் வாங்கி கொடுத்த, காலாவதியான சாக்லேட்டை ஒரு வயது சிறுமி ஒருவர் இரத்த வாந்தி எடுத்ததை அடுத்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது பெற்றோருடன் உறவினர் வீட்டிற்கு சென்ற அச்சிறுமிக்கு, சம்பந்தப்பட்ட உறவினர், தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மளிகை கடையிலிருது சாக்லேட் பாக்கெட் ஒன்றை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த சாக்லேட்டை சாப்பிட்டதும், அச்சிறுமி இரத்த வாந்தி எடுத்ததை அடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பரிசோதனையில், அச்சிறுமி மாசடைந்த அல்லது காலாவதியான சாக்லேட்டை சாப்பிட்டதால், நச்சுணவு பாதிப்புக்கு இலக்காகி இரத்த வாந்தி எடுத்தது கண்டறியப்பட்டது.
அச்சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மளிகை கடை சோதனையிடப்பட்ட வேளை ; அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவுப் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
கடை உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காலாவதியான உணவுப் பொருட்கள் குறித்து அவருக்கு எதுவும் தெரியாது என்பதும் தெரியவந்தது.
பயனீட்டாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.
இதற்கு முன், பாட்டீலாவில், மாசடைந்த பிறந்த நாள் கேக்கை உட்கொண்ட பத்து வயது சிறுமி ஒன்று பரிதாபமாக உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.