நியூ யார்க், மே 7 – அமெரிக்கா, வடக்கு கரோலினாவில், வீட்டின் படுக்கை அறை சுவரில் இருந்து வந்த விசித்திரமான சத்தத்தால் அச்சத்தில் உரைந்திருந்த சிறுமிக்கு, அதற்கான விடை கிடைத்தது.
அச்சிறுமியை அச்சுறுத்தும் வகையில், படுக்கை அறை சுவரிலிருந்து அப்படி என்ன சத்தம் வந்திருக்க முடியும் என்கிறீர்களா?
அதற்கு அந்த படுக்கை அறை சுவரில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தேனீக்கள் வசித்து வந்தது தான் காரணம்.
சுவரில் “அரக்கர்கள்” நடமாடுவதாக கூறி அச்சத்தில் இருந்த தனது மகளை, நீண்ட காலமாக தூங்க வைக்க, தாயான ஆஷ்லே கிளாஸ் போராடி வந்துள்ளார்.
சத்தம் தொடர்ந்ததால், “தெர்மல் இமேஜிங் கேமராவைப்” பயன்படுத்தி ஆஷ்லே சோதனை செய்துள்ளார். அதன் வாயிலாக, சிறுமியின் படுக்கை அறை சுவரில் பெரிய தேனீக்கள் கூட்டம் இருப்பதை அவர் அடையாளம் கண்டதாக கூறப்படுகிறது.
அச்சம்பவத்தை தனது டிக் டொக்கில் பதிவிட்டுள்ள ஆஷ்லே, அது தமக்கு கிட்டிய ஒரு “கொடுங்கனவு” என வர்ணித்துள்ளார்.
சுவரைத் துளைத்து பார்த்தபோது, அதில் சுமார் 50 ஆயிரம் தேனீக்கள், ஏராளமான தேனுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த தேனீக்கள் அனைத்தும், 100 ஆண்டுகள் பழைமையான அவ்வீட்டின் புகையை போக்கும் குழாய் வழியே சுவரில் புகுந்து, கூட்டை கட்டி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
அவ்வீட்டின் சுவரில் இருந்து மீட்கப்பட்ட அந்த தேனீக்கள், பாதுகாப்பாக சரணாயத்திற்கு மாற்றப்பட்டன.