
கோலாலம்பூர், ஏப் 4 – பட்டதாரிகளுக்கென பிரத்தியேகமாக குறைந்தபட்ச சம்பள சட்டத்தை இயற்றுமாறு, மேலவை உறுப்பினர் செனட்டர் சிவராஜ் சந்திரன் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போதைய கால கட்டத்தில் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்சம் மாதத்திற்கு மூவாயிரம் ரிங்கிட் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென அவர் பரிந்துரைத்துள்ளார்.
அதோடு அண்மையில், TVET தொழிற்பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 3,000 ரிங்கிட் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென துணைப்பிரதமர் கூறியிருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு தாம் வேலை செய்யத் தொடங்கியபோது, பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு 1,600 ரிங்கிட் சம்பளம் வழங்கப்பட்டது.
ஆனால் 20 ஆண்டுகள் கழித்து, பட்டதாரிகளுக்கு இன்னும் 1,800 ரிங்கிட்டிலிருந்து 2,000 ரிங்கிட் வரையில் மட்டுமே சம்பளம் வழங்கப்படுவது வேதனை அளிக்கும் விஷயமாக இருப்பதாக சிவராஜ் குறிப்பிட்டார்.
அதையடுத்து, இளைய சமுதாயத்தினரின் வருமானத்தை உயர்த்த, மூவாயிரம் ரிங்கிட்டுக்கும் கீழ் போகாத குறைந்த பட்ச சிறப்பு சம்பளத் திட்டத்தைக் கொண்டு வருமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார் .