பட்டவொர்த், மே-5, பினாங்கு பட்டவொர்த்தில் பாராங் கத்திகளுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 28 பேர் கைதாகியுள்ளனர்.
அச்சம்பவம் வெள்ளிக்கிழமையன்று Jalan Raja Udaவில் நிகழ்ந்தது.
வாக்குவாதம் முற்றி சினமூட்டுதலில் முடிந்ததே கலவரத்துக்குக் காரணம் என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக செபராங் பெராய் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் Assistant Commissioner Mohd Asri Shafie தெரிவித்தார்.
17 முதல் 51 வயதிலான சந்தேக நபர்கள் பட்டவொர்த் சுற்று வட்டாரங்களில் கைதாகி, மேல் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டனர்.
ஆயுதமேந்தி கலவரத்தில் ஈடுபட்டதன் பேரில் குற்றவியல் சட்டத்தின் 148-வது பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
கலவரத்தின் போது அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கலவரத்தில் ஈடுபட்டு இன்னும் பிடிபடாமல் இருப்போரும் போலீசாரால் தீவிரமாகத் தேடப்படுகின்றனர்.
Jalan Raja Uda-வில் ஒரு கடைக்கு முன் ஆடவர் கும்பல் பாராங் கத்திகளுடன் கலவரத்தில் ஈடுபட்டு வாகனமொன்றைச் சேதப்படுத்துவது, முன்னதாக வைரலான 4 வினாடி காணொலியில் தெரிந்தது.