பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 2 – கல்வித்துறையில் அரசாங்கம் வழங்கி வரும் உதவித்தொகை, பணக்காரர்களுக்கு நிறுத்தப்படலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்து அடிப்படையற்றது என எதிர்ப்பை தெரிவித்துள்ளது பெர்சத்து கட்சியின் இணைப்பிரிவு.
பணக்காரர்களுக்கான கல்வி மானியங்களைக் குறைக்கும் யோசனை, அனைவரையும் உள்ளடக்கிய தேசியக் கல்வி முறையை உருவாக்கும் முயற்சிகளுக்கு எதிரானது என்று பெர்சத்து கட்சியின் இணைப்பிரிவின் தகவல் பிரிவுத் தலைவர் ஆர். ஸ்ரீ சஞ்சீவன் கூறியுள்ளார்.
இது அனைத்துலக அளவிலான மலேசியாவின் தரத்தை குறைத்து மதிப்பிடும் சூழலை உருவாக்கும் என்பதோடு, நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு எதிராக தாக்கங்களைக் கொண்டு வரலாம் என அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த முன்மொழிவு தவறான கொள்கை மட்டுமல்லாது, மலேசியாவின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாகவும் அமையும் என்று சஞ்சீவன் கூறினார்.
முன்னதாக, வரும் அக்டோபர் 18 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் முன்னிலைப்படுத்தப்படவிருக்கும் முக்கிய விவகாரங்களில், இந்த கல்வித்துறையில் அரசாங்கம் வழங்கி வரும் உதவித்தொகையும் ஒன்றாகும் என்று பிரதமர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.