
கோலாலம்பூர், டிச 3 – ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்க விகிதம் 2.5 விழுக்காடு எட்டியதைத் தொடர்ந்து அது தொடர்ந்து குறையும் என்று பேங்க் நெகாரா மலேசியா கவர்னர் அப்துல் ரஷீட் கபுர் தெரிவித்திருக்கிறார். விலை உயர்வு வேகமாகே குறைந்து வருவதால் பணவீக்கம் தொடர்ந்து குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார். எரிபொருள் மான்யங்கள் தொடர்பான உள்நாட்டுக் கொள்கையில் ஏற்படும் மாற்றங்களால் எழும் பண வீக்க விகிதத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம் என்று அப்துல் ரஷீட் தெரிவித்தார். நிதிக் குற்றம் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு மீதான 2023 ஆண்டின் அனைத்துலக மாநாட்டில் இன்று உரையாற்றியபோது அப்துல் ரஷீட் இத்தகவலை வெளியிட்டார்.
2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பணவீக்க விகிதம் உச்சத்தை எட்டியதால், மற்ற நாடுகளின் பொருளாதாரங்கள் கொண்டிருக்கும் கடுமையான பணவீக்க சவால்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதால் மலேசியா அதிர்ஷ்டசாலி என்று அவர் கூறினார். உலகளாவிய நிலையில் மூலப்பொருட்களின் விலைகள் குறைந்ததோடு , விநியோகம் மற்றும் தேவைகள் காரணமாக இந்த சூழ்நிலை உருவாகுவதாக அப்துல் ரஷீட் சுட்டிக்காட்டினார். உலகளாவிய நிலையில் பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும், மலேசியப் பொருளாதாரம் மீட்சியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக அவர் கூறினார்.