தோக்யோ, ஆகஸ்ட் -21, ஜப்பானில் குப்பைகள் நிறைந்து அலங்கோலமாக கிடந்த வீட்டைச் சுத்தம் செய்யப் போன பணியாளர்கள், அங்கு மனித எலும்பு கூடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அலங்கோலமாகக் கிடந்த படுக்கையறையில் மெத்தை துணியை விலக்கிய போதே எலும்பு கூடு கண்ணில் பட்டது.
முதலில் அது பொம்மை எலும்பு கூடாக இருக்கலாம் என்றெண்ணிய அப்பணியாளர்கள் உரிமையாளரிடம் சாதாரணமாக தகவல் கொடுக்க, அவருக்கோ அப்போது தான் சந்தேகம் புலப்பட்டது.
அதாவது பத்தாண்டுகளுக்கு முன் காணாமல் போன தன் தாயாருடைய எலும்பு கூடாக அது இருக்கலாமென்று.
உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க, அவர்களும் பரிசோதனைக்குப் பிறகு அது தாயினுடையது தான் என உறுதிச் செய்தனர்.
பத்தாண்டுகளுக்கு முன் காணாமல் போன தாய், வீட்டுக்குள்ளேயே இறந்து போய், எலும்பு கூடு மட்டுமே மிஞ்சியிருக்கிறது.
தாய் காணாமல் போன பிறகு கொஞ்ச நாள் தந்தையும், பிறகு தங்கையும் அவருடன் அங்கு வசிந்து வந்துள்ளனர்.
ஆனால் ஒருவருக்கும் இந்த பத்தாண்டுகளில் அது தெரியவில்லை.
அதற்கும் அவ்வாடவர் பதில் வைத்துள்ளார் – அதாவது குப்பைக்கூளங்களால் வீடு இருந்த லட்சணத்தில் சடலத்தின் துர்நாற்றம் அடிபட்டு போயிருக்குமென்று.
காணாமல் போன தாய் எங்களுக்கே தெரியாமல் வீடு திரும்பி அவரின் அறையில் தனியாக இறந்திருக்கக் கூடுமென்றும் அவர் கூறிக் கொண்டார்.
இந்நிலையால் அந்த ‘குப்பை வீட்டின்’ உரிமையாளர் மீது குற்றவியல் விசாரணை எதுவும் தொடங்குமா என இதுவரை தெரியவில்லை.
ஆனால் செய்தியைப் பார்த்த ஜப்பானிய நெட்டிசன்கள் அவரை கருத்துகளால் வெளுத்து வாங்குகின்றனர்.
பெற்றத் தாய் பத்தாண்டுகளாக வீட்டில் தனியாக இறந்து கிடந்துள்ளார்; இது தான் வயதான காலத்தில் பெற்றவர்களைப் பார்த்துக் கொள்ளும் லட்சணமா என சாடி வருகின்றனர்.
இறந்து போனவரின் சடலத்திலிருந்து வரும் துர்நாற்றம் தெரியாத அளவுக்கு அந்த வீட்டில் அப்படி என்னதான் குப்பைகள் கிடந்தன என்றும் பலர் கேள்வி கேட்கின்றனர்.