கோலாலம்பூர், டிசம்பர்-31, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட அனைத்து 3 முக்கியக் கோயில்களிலும் வரும் ஜனவரி 14-ஆம் தேதி தைப்பொங்கல் விழாவுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் கோயில், பத்துமலைத் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் ஆகியவையே அம்மூன்று கோயில்களாகும்.
தை முதல் நாளான அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு மூன்று கோயில்களிலும் பொங்கல் பானை வைக்கப்படுமென, ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவரும் அறங்காவலருமான தான் ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.
பிறகு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் என நண்பகல் வரை நிகழ்வுகள் தொடருமென்றார் அவர்.
இவ்வேளையில் வீட்டில் சூரியப் பொங்கல் வைக்க உகந்த நேரமாக காலை 7.30 மணிக்கு மேல் காலை 10 மணி வரையிலும், பின்னர் மாலை 5.30 மணிக்கு மேலிருந்து 6.30 மணி வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவற்றைப் பின்பற்றி மக்கள் வீடுகளில் பொங்கல் வைக்கலாம்.
மற்றொரு சிறப்பம்சமாக ஜனவரி 19-ஆம் தேதி பத்துமலை வளாகத்தில் தேசியப் பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளது.
இந்தியக் கலாச்சார மையத் திறப்பு மற்றும் பொங்கல் விழா என இருபெரும் விழாவாக அது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரு நிகழ்வுகளிலும் ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ளனர்.
பல்வேறு கலை கலாச்சாரப் படைப்புகள், தமிழக இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், ஒயிலாட்டம் கோலாட்டம் போன்ற நடனங்கள் என இவ்வாண்டு அந்த தேசியப் பொங்கல் விழா களைக் கட்டும்.
எனவே, பக்தர்கள் அதில் திரளாகப் பங்கேற்று விழாவை சிறப்பிக்க வேண்டுமென தான் ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.