கோலாலம்பூர், மே-12 – பத்து மலைத் திருத்தலத்தில் அமையவிருக்கும் இந்திய கலாச்சார-பாரம்பரிய மையம் இன்னும் 2-3 மாதங்களில் பூர்த்தியாகும் என, ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் தான் ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்துள்ளார்.
இந்தியர்களின் கலை, கலாச்சார, பண்பாட்டு, பாரம்பரிய அம்சங்களை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுச் சேர்க்கும் உன்னத நோக்கத்தோடு அம்மையம் கட்டப்பட்டு வருகிறது.
80 விழுக்காடு கட்டுமானம் பூர்த்தியாகி விட்ட நிலையில், எஞ்சியப் பணிகள் 2-3 மாதங்களில் நிறைவுப் பெற்று விடும் என தான் ஸ்ரீ நடராஜா சொன்னார்.
அக்கலாச்சார மையத்தில் வைப்பதற்காக இந்திய பாரம்பரிய இசை வாத்தியங்களை, இங்குள்ள இந்தியத் தூதரகத்திடம் தேஸ்தானம் கேட்டிருந்த நிலையில், அதனை அது ஏற்றுக் கொண்டு அவற்றை ஒப்படைக்கும் நிகழ்வும் சனிக்கிழமை நடந்தேறியது.
அதில் உரையாற்றிய தான் ஸ்ரீ நடராஜா, இசை வாத்தியங்களைக் கொடுத்துதவிய இந்தியத் தூததரகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, இந்தியக் கலை-பண்பாட்டு அம்சங்களில் அதனுடன் தேவஸ்தானம் தொடர்ந்து அணுக்கமாக செயல்படும் என்றார்.
இந்தியத் தூதர் பி.என்.ரெட்டி கூறுகையில், இந்நாட்டில் இந்திய பாரம்பரிய அம்சங்கள் செழித்தோங்க தமது தரப்பு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தார்.
இவ்வேளையில் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் கோயில் திருப்பணி துவக்க பூஜையும் திருப்பணி நன்கொடை துவக்க நிகழ்வும் வரும் ஜூன் மாதம் 2-டாம் தேதி நடைபெறவுள்ளது.
அங்கு கருங்கல்லால் ஆன நுழைவாயில் தூண்கள், 32 விநாயகர் பீடங்கள் மற்றும் மணிமண்டபம் ஆகியவற்றை கட்டுவதற்காக அத்திருப்பணி நடைபெறுகிறது.
அதோடு, பத்துமலையில் மின் படிகட்டுகளை அமைக்கும் பணிகளும் கூடிய விரைவிலேயே தொடங்கப்படும் என தான் ஸ்ரீ நடராஜா கூறினார்.