கோலாலம்பூர், ஜனவரி 2 – எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி பத்துமலை வளாகத்தில் மாபெரும் தேசியப் பொங்கல் விழா மிக விமரிசையாக நடைபெறவுள்ளதாக ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.
இப்பொங்கல் விழாவுடன் இந்தியக் கலாச்சார மையத்தின் திறப்பு விழாவும் இரு பெரிய நிகழ்ச்சிகளாக நடைபெறவிருக்கிறது.
இந்திய பாரம்பரியத்தின் பண்பாட்டை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்குடன் பல்வேறு அம்சங்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் அக்கலாச்சார மையம், காலை 10.30 மணிக்கு திறப்பு விழா காணவிருப்பதாக டான் ஸ்ரீ நடராஜா கூறினார்.
பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தமிழக இசைக் கலைஞர்களின் பாரம்பரிய இசை நடன நிகழ்ச்சிகளும் இடம்பெறவிருப்பதாக அவர் கூறினார்.
இதனிடையே, பத்துமலையின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு டான் ஸ்ரீ நடராஜா எழுதிய ‘பத்து மலை பக்தி மலை’ என்ற புத்தகமும் அந்நாளில் ம.இ.காவின் தேசிய தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ. எம். சரவணன் முன்னிலையில் வெளியிடு காணவிருக்கிறது.
அதோடு, இவ்விழாவின் இரண்டாம் அங்கமாக மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ சிவக்குமார் தலைமையில் பல்வேறு போட்டிகளுடன் ஏற்பாடு செய்ப்பட்டிருக்கும் தேசிய பொங்கல் விழா குறித்தும் டான் ஸ்ரீ நடராஜா இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய பொங்கல் விழா, கலாச்சாரத்தின் மகத்துவத்தைச் சிறப்பிக்கும் அரிய வாய்ப்பு என குறிப்பிட்ட டான் ஸ்ரீ நடராஜா, அனைத்து பக்தர்களும் திரளாக வந்து கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
இதற்கு முன்பாக தைப்பொங்கல் தினத்தன்று, தேவஸ்தானத்தின் கீழ் உள்ள கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் கோயில், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், மற்றும் பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயில்களில் காலை 9.30 மணிக்கு பொங்கல் விழா கொண்டாடப்படும் எனவும் அவர் அறிவித்தார்.