கோலாலம்பூர், ஜன. 1 – புத்தாண்டை முன்னிட்டு, பத்துமலை திருத்தலத்தில் அமைந்துள்ள 140 அடி உயர முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தலைமையில், காலை 9 மணிக்கு துவங்கிய சிறப்பு பூஜைகளுக்குப் பின்,, பக்தர்கள் முருகனின் திருவடிகளில் பன்னீர் அபிஷேகம் செய்து தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.
இந்த விழாவில், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசிய துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ சரவணன், ம.இ.கா தேசிய பொருளாளரும் தேவஸ்தானத்தின் அறங்காவலருமான டத்தோ சிவகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
வருடாந்திர விழாவாக ஒன்பதாவது ஆண்டாக வெகு விமரிசையாக நடைபெற்ற இவ்விழாவில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பொறுமையாக நின்று, வருடத்தின் முதல் நாளில் சரவணபவனின் அருளைப் பெற்றனர்.
இவ்வேளையில், 2026ஆம் ஆண்டில் முருகன் சிலையின் 20ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, மிகப் பிரமாண்டமான பன்னீர் அபிஷேக விழா ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக டான் ஶ்ரீ ஆர். நடராஜா இன்று அறிவித்தார்.
இன்றைய விழாவில், கலியுக வரதனும் கண்கண்ட தெய்வமுமான கந்தனின் திருவடிகளில் அருளைப் பெற்ற பக்தர்கள், புத்தாண்டை ஆன்மீக பரிவேசத்தில் துவக்கி மகிழ்ச்சி அடைந்தனர்.