Latestமலேசியா

இந்தியர்களுக்கு உதவ மித்ராவுக்கு அப்பால் செல்வீர் அரசாங்கத்திற்கு – டாக்டர் ராமசாமி வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 8 – இந்தியர்களுக்கு உதவ மித்ராவிற்கு அப்பால் செல்லும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தை பினாங்கின் முன்னாள் முதலமைச்சரான பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தியர்களிடையே வறுமையை ஒழிக்கும் விவகாரம் தொடர்பான கேள்விக்கு ஒற்றுமைத்துறை அமைச்சு பதில் அளித்தபோது இந்திய சமூகத்திற்கு உதவ மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா மூலம் பல்வேறு முயற்சிகள் ஆராயப்படும் என்று கூறியிருக்கிறது. வருடாந்திர பட்ஜெட்டில் 100 மில்லியன் ரிங்கிட் ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டாலும், மித்ரா இன்னும் அதிகார வர்க்கத்தில் சிக்கித் தவிக்கிறது என்பதே உண்மை. தலைவர்களை மாற்றுவது, பல்வேறு அமைச்சகங்களின் கீழ் அதை அடிக்கடி நகர்த்துவது போன்ற அம்சங்கள் மித்ராவின் செயல்திறனை தொடர்ந்து பாதிக்கின்றன. மித்ரா இந்திய சமூகத்தின் ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களின் திறனுருவாக்கம் மற்றும் திறமையை மேம்படுத்த வேண்டும் என பி ராமசாமி வலியுறுத்தினார்.

இந்திய சமூகத்தைப் பொறுத்த வரையில், நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் பங்காற்றிய சமூகம். RM100 மில்லியன் பட்ஜெட் என்பது கடுகளவு அல்லது பரந்த கடலில் ஒரு துளியாகும். பூமிபுத்ரா சமூகத்தின் வளர்ச்சிக்காக கோடிக்கணக்கான பணம் கொட்டப்படும்போது, ​​இந்தியர்கள் மட்டும் ஏன் பலியாக்கப்பட வேண்டும். இந்தியர்கள் நாட்டின் குடிமக்கள் இல்லையா? தேசத்தின் வளர்ச்சிக்காக அவர்கள் தியாகம் செய்யவில்லையா என்றும் ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்க சேவையில் அதிகமான இந்தியர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவது , பொதுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இந்திய மாணவர்களுக்கான அதிக இடங்களைத் திறப்பது. தகுதியுள்ள இந்திய மாணவர்களுக்கு நிதி உதவிகள் மற்றும் உபகாரம் சம்பளம் வழங்குதல். இந்தியர்கள் வணிகம் மற்றும் தொழில் முனைவோர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான பெர்மிட்டுகள் மற்றும் உரிமங்களை ஒதுக்கீடு செய்தல் உட்பட பல்வேறு விவேகமான நடவடிக்கைகைளை பக்காத்தான் அரசாங்கம் எடுக்க வேண்டும் என டாக்டர் ராமசாமி தமது முகநூலில் பதிவிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!