கோலாலம்பூர், ஜனவரி 1 – பத்துமலை திருத்தலத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் வசதிக்காக மின் படிக்கட்டுகளை அமைக்கும் திட்டத்திற்கான பூமி பூஜை எதிர்வரும் ஜனவரி 25 அன்று நடைபெறும் என்று ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவரும் அறங்காவலருமான டான் ஸ்ரீ ஆர். நடராஜா இன்று அறிவித்தார்.
272 படிகளை ஏற முடியாதவர்களுக்கு மலைக்கோவிலுக்குச் செல்வதற்கான முக்கிய வாய்ப்பாக இந்த மின் படிக்கட்டு அமையும் என்றார் அவர்.
இந்தக் கட்டுமானம் 2026ஆம் ஆண்டு தைப்பூசத்திற்குள் முழுமையாக கட்டுப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் திகதி சிலாங்கூர் மந்திரி பெசார் Dato’ Seri Amirudin Bin Shari, கோவிலுக்கு வருகை அளித்து பார்வையிட்ட பின், இந்தத் திட்டத்திற்கான மாநில அரசின் அனுமதி கடிதம் இம்மாதம் 18 அல்லது 19ஆம் திகதிகளில் கிடைக்கும் என அவர் வாக்குறுதி கூறியதை டான் ஸ்ரீ நடராஜா நினைவுபடுத்தினார்.
இவ்வேளையில் இவ்வதரவுக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பாக மாநில அரசுக்கும் சிலாங்கூர் மந்திரி பெசாருக்கும் தேவஸ்தானத்தின் அறங்காவலரான டத்தோ சிவக்குமார் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மின் படிக்கட்டின் பின், பல்நோக்கு மண்டபம் உள்ளிட்ட கூடுதல் கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படும் என டான் ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்