
கோலாலம்பூர், நவ 7- பத்துமலைத் திருத்தலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ மகா துர்க்கையம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேக வைபவம் இம்மாதம் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிகவும் சிறப்பாக நடைபெறும் . துர்க்கையம்மன் ஆலயம் சிறப்பான முறையில் நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் மும்மூரமாக நடைபெற்று வருவதாக ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் கும்பகோணம் பட்டிஸ்வரன் கோயில் பாபு குருக்கள் தலைமையில் நமது நாட்டைச் சேர்ந்த சிவாச்சரியர்கள் அனைவரும் சேர்ந்து இந்த கும்பாபிஷேகத்தை நடத்திவைப்பார்கள்.
இந்நிலையில், இம்மாதம் 15ஆம் தேதி மாலை 6 மணியளவில் கணபதி பூஜை , இரவு வாஸ்து சாந்தி பூஜையோடு தினசரி காலையும் மாலையும் பூஜைகளும் நடைபெறவுள்ளன. அதனை தொடர்ந்து 16ஆம் தேதி வியாழக்கிழமை யாகசாலை நிர்மானம், விமான கலச ஸ்தாபனம், 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் பக்தர்கள் தங்கம், வெள்ளி வைக்கும் நிகழ்வு நடைபெறும். 18ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் இரவு வரை மூல விக்கிரகத்திற்கு எண்ணெய் சாத்துதல் நிகழ்விலும் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.
இறுதியாக நவம்பர் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாக சாலையிலிருந்து புனித நீர் எடுத்துச்செல்லப்பட்டு கும்பங்களில் தெளிக்கப்பட்டு அதன் பிறகு மகா அபிஷேகமும் நடைபெறும்.
மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கும்பாபிஷேக நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளும்படி டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டார்.