கோலாலம்பூர், செப்டம்பர்-29 – பேராக், பத்து காஜா, தாமான் தேஜாவில் நிலம் உள்வாங்கியதால் இரு வீடுகளின் தாழ்வாரங்கள் ஆட்டம் கண்டன.
சனிக்கிழமை இரவு பெய்த கனமழையின் போது அவ்வீடுகளது தாழ்வாரங்களின் பெரும்பகுதி சரிந்ததாக, பேராக் தீயணைப்பு – மீட்புத் துறை கூறியது.
மேலுமிரு வீடுகள் சிறிய அளவில் சேதமுற்றன.
ஆனால் நல்லவேளையாக எந்த வீடும் இடிந்து விழவோ, அல்லது யாரும் காயமடையவோ இல்லையென அத்துறை உறுதிப்படுத்தியது.
பாதிக்கப்பட்ட வீடுகளின் நில அமைப்பை கண்காணித்த தீயணைப்புக் குழு, தற்சமயத்திற்கு அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு போகுமாறு அறிவுறுத்தியது.
சற்று மோசமாக பாதிக்கப்பட்ட 11-ஆம் எண் வீட்டிலிருந்த கணவன்-மனைவி உடனடியாக வெளியேறினர்.
எனினும் 9-ஆம் எண் வீட்டில் தனியாக இருந்த மாது அங்கேயே தங்கியிருக்க முடிவுச் செய்துள்ளார்.
எனவே, முன் பக்கத்திற்கு பதிலாக வீட்டின் பின்வாசல் கதவைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் அவரை அறிவுறுத்திச் சென்றுள்ளனர்.