பத்து பஹாட், மே 3 – ஜோகூர், பத்து பஹாட், ஜாலான் ரஹ்மாட்டில், கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதற்கு, அக்காரின் ஓட்டுனருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பே காரணம்.
அந்நபர் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளாவதற்கு முன்பே, அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
நேற்றிரவு மணி 7.50 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்தது.
அதில் உயிரிழந்த நபர் செலுத்திய யுண்டாய் எலன்ந்ரா ரக கார், 24 வயது பெண் ஒருவர் செலுத்திய புரோடுவா பெஸ்சா ரக காரை மோதித் தள்ளியது.
இரவு மணி எட்டு வாக்கில் அவ்விபத்து குறித்து தகவல் கிடைத்ததை, பத்து பஹாட் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் இஸ்மாயில் டொல்லா உறுதிப்படுத்தினார்.
பத்து பஹாட்டிலிருந்து, ஜாலான் பந்தாய் நோக்கி பயணமான, அவ்வாடவர் செலுத்திய கார், சம்பவ இடத்தை வந்தடைந்ததும், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, இடது சாலையில் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெஸ்சா காரை மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.
அவ்விபத்தின் போது, பெஸ்சா காரில் அமர்ந்திருந்த பெண்ணும், பயணி ஒருவரும் சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பினர்.