பத்து பஹாட், நவ 4 – பத்து பஹாட்டில் பின்டு (Bindu ) பாலத்தின் மேல் ஆடவர் ஒருவரின் கார் மற்றும் செருப்பு காணப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆற்றில் விழுந்திருக்கக்கூடும் என அவரது குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.
27 வயதுடைய அந்த ஆடவர் Sungai Simpang Kanan ஆற்றில் விழுந்திருக்கலாம் என்ற அச்சத்தினால் நேற்று காலை மணி 10.09 அளவில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார்.
ஒரு கார், ஒரு ஜோடி செருப்பு, தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணப்பை போன்றவை கண்டுப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 50 வயது பெண் போலீசில் புகார் செய்துள்ளார்.
அந்த ஆடவரின் உடலைத் தேடும் மற்றும் மீட்கும் பணியில் போலீஸ், தீயணைப்பு மீட்புப்படை வீரர்கள் , மலேசிய பொது தற்காப்பு படை உறுப்பினர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் நேற்று மாலை மணி 6 வரை மீட்புக் குழுவினர் அந்த ஆடவரின் உடலை கண்டுப்பிடிக்கவில்லை . சம்பந்தப்பட்ட ஆடவர் ஆற்றில் குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து போலீஸ் விசாரணையில் இன்னமும் உறுதிப்படுத்த முடியவில்லை என ஷாருல்அனுவார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.