Latestமலேசியா

பத்து மலைக்கான பிரதமரின் வருகை மக்கள் மீதானா மடானி அரசாங்கத்தின் அக்கறையின் வெளிப்பாடு – கோபிந்த் சிங் வருணனை

பத்து மலை, பிப்ரவரி-8 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று பத்து மலைக்கு மேற்கொண்ட சிறப்பு வருகை, நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த மடானி அரசாங்கத்தின் வழி அவர் கொண்டுள்ள உறுதிபாட்டையும் அக்கறையையும் புலப்படுத்துகிறது.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அவ்வாறு வருணித்தார்.

அதுவும் தனித்துவமிக்க மலேசியத் தைப்பூச காலத்தில், நாட்டின் பிரதமர் தாய்க்கோயிலுக்கு வந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த வருகையின் போது,
தேவஸ்தான செயலவையினர் முன் வைத்த கோரிக்கைகளுக்கு மத்திய அரசு, சிலாங்கூர் மாநில அரசுடன் இணைந்து உதவும் என பிரதமர் உத்தரவாதம் அளித்தார்.

ஆலயம் சமூக சேவை மையமாகச் செயல்பட புதிய மண்டபம் கட்டுவதற்கு வசதிகள் செய்து தரப்படும் எனவும் டத்தோ ஸ்ரீ அன்வார் கூறியதாக கோபிந்த் சொன்னார்.

இவ்வேளையில், கடந்தாண்டு இலக்கவியல் அமைச்சு, இந்தியர்களின் மேம்பாட்டுக்குக் கனிசமான தொகையை வழங்கியது; ஆலய மேம்பாட்டுப் பணிகள், இந்திய அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு நிதி உதவி, தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி உதவி உள்ளிட்டவை அவற்றிலடங்கும்.

இந்த ஆண்டும் இந்தியர்களுக்கு அது போன்ற உதவிகள் தொடருமென கோபிந்த் சிங் உத்தரவாதம் அளித்துள்ளார்.

அவற்றில் ஒரு பகுதியாக, இவ்வாண்டு தைப்பூச தினத்தையொட்டி, பத்துமலைக்கு வரும் பக்தர்களுக்கு இலக்கவியல் அமைச்சு அன்னதானமும் குடிநீரும் வழங்கும் என்றார் அவர்.

தைப்பூசத்தை முன்னிட்டு, இவ்வாண்டு, 2 பெரிய மின்னியல் திரைகளை பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்குத் தாம் வழங்கவிருப்பதாகவும் கோபிந்த் கூறினார்.

இந்த மின்னியல் திரையின் வழி தைப்பூசத்திற்கு வரும் பக்தர்கள் தூரத்திலிருந்தே ஆலயத்தில் நடைபெறும் பூஜைகள் தொடர்பான காணொலிகளை கண்டுகளிக்கலாம்.

பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், நல்லிணக்கத்தைக் கொண்டாடும் மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, இந்தியர்களின் நலன் காக்கவும், அவர்களது நம்பிக்கைக்கு மதிப்பளிக்கவும் இலக்கவியல் அமைச்சு மேற்கொள்ளும் முயற்களில் இதுவும் ஒன்றாகும் என அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!