
கோலாலம்பூர், பிப்ரவரி-4 – பத்து மலைத் திருத்தலத்தில் மின் படிக்கட்டு மற்றும் பல்நோக்கு மண்டபம் கட்டுவதற்கு சிலாங்கூர் அரசாங்கம் கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
அதற்குரிய ஆவணங்களைப் பத்து மலை நிர்வாகம் ஒப்படைத்துள்ள நிலையில், அவை பரிசீலிக்கப்பட்டு முறைப்படி அனுமதிகள் வழங்கப்படும்.
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கு சற்று கால அவகாசம் எடுக்கும் என்றாலும், அனுமதி வழங்குவது உறுதிச் செய்யப்படுமென அவர் சொன்னார்.
அவ்விருத் திட்டங்களும் பத்து மலைக்கும் பக்தர்களுக்கும் நன்மையைக் கொண்டு வரக்கூடியவை.
முக்கிய சுற்றுலாத்தலமாகவும் இருப்பதால் மின் படிகட்டும், பல்நோக்கு மண்டபமும் அதன் அந்தஸ்தை மேலும் உயர்த்தும் என்றார் அவர்.
மந்திரி பெசார் நேற்று பத்துமலைக்கு வருகைத் தந்த போது அவ்விவரங்களை வழங்கினார்.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையிலான தேவஸ்தானத்துடன் நடந்த கூட்டத்திலும், அமிருடின் கலந்துகொண்டார்.
அதன் போதே, மின் படிக்கட்டு மற்றும் பல்நோக்கு மண்டபம் கட்டுவது குறித்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டு, அனுமதிக்கான ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன.
இவ்வேளையில், அவ்விவகாரத்தில் இதற்கு முன் சில சிக்கல்கள் இருந்த நிலையில், அவற்றைக் களைய டத்தோ ஸ்ரீ அமிருடினுக்கு நடவடிக்கை எடுத்தமைக்கு, தான் ஸ்ரீ நடராஜா நன்றி பாராட்டினார்.
நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பக்தர்களின் வசதிக்காக இன்று பத்து மலை ஆற்றங்கரையில் தார் சாலைப் போடப்படவிருப்பதாகவும் அவர் சொன்னார்.