Latestமலேசியா

பந்திங்கில் பள்ளிக்கு அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்; மேலும் 10 பேர் கைது!

பெட்டாலிங் ஜெயா, நவ 5 – கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி சிலாங்கூர், பந்திங் (Banting)கிலுள்ள பள்ளியொன்றுக்கு அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து அத்துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் தொடர்பில் இதுவரை கைதானவர்களின் மொத்த எண்ணிக்கை 29ஆக அதிகரித்திருப்பதாக சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் டத்தோ ஃபாட்ஸில் அகமட் (Datuk Fadzil Ahmad) தெரிவித்தார்.

அச்சம்பவத்தில் காருக்குள் இருந்த வர்த்தகர் ஒருவரும், காரை ஓட்டி வந்த அவரது மெய்க்காவலரும் தோட்டாக்கள் பாய்ந்து காயமடைந்தனர். அதோடு கார் மோதி, பள்ளிக்கு அருகே நின்று கொண்டிருந்த 3 மாணவர்களும் இதில் காயமடைந்தனர்.

இச்சம்பவம் மீதான விசாரணை அறிக்கை, கடந்த மாதம் 27ஆம் தேதி தேசிய சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக டத்தோ ஃபாட்ஸில் கூறினார்.

குற்றவாளிகளை சட்டத்தை முன் நிறுத்தி, தக்க தண்டனை பெற்றுத் தருவதன் மூலம், பந்திங், கோல லங்காட் வட்டாரங்களில் மட்டுமல்லாது, சிலாங்கூர் மாநிலம் முழுவதும் இதுபோன்ற குண்டர் கும்பல் நடவடிக்கைகளைத் துடைத்தொழிக்க முடியும் என தாங்கள் நம்புவதாக டத்தோ ஃபாட்ஸில் தெரிவித்தார்.

செப்டம்பர் 25ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில் தெலொக் டத்தோக் (Telok Datok) இடைநிலைப் பள்ளிக்கு எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் காரினுள் இருந்த வர்த்தகரும் அவரது மெய்க்காவலரும் துப்பாக்கித் தோட்டா பாய்ந்து காயமடைந்தனர்.

அவர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மாணவர்களை மோதித் தள்ளியதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!