கோலாலம்பூர், நவம்பர்-19 – இவ்வாண்டு ஜூன் மாதத்தை விட ஜூலையில் 10 விழுக்காடு வரை விலை உயர்வு கண்டது வெறும் நான்கே நான்கே உணவுப் பொருட்கள் தான் என்கிறார் பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி.
அவை முறையே சாதாரண பப்பாளி, வெள்ளை இறால், வெலன்சியா ஆரஞ்சு மற்றும் கொட்டையில்லா கொய்யாப் பழமாகும்.
விலையேற்றம் கண்ட 238 பொருட்களில் அவை அடங்கும்.
அதே சமயம் அக்காலக்கட்டத்தில் 177 பொருட்கள் விலைக் குறைப்பைச் சந்தித்துள்ளன.
அவற்றில் வெள்ளரிக்காய், சுத்தம் செய்யப்பட்ட கோழி, செம்மறி ஆட்டிறைச்சி, ஊசி மிளகாய், முட்டைக்கோஸ் உள்ளிட்ட 20 பொருட்கள் 10 விழுக்காட்டுக்கும் மேல் விலைக் குறைந்தன.
குறிப்பாக சுத்தம் செய்யப்பட்ட கோழி 9 ரிங்கிட் 62 சென்னிலிருந்து 8 ரிங்கிட் 54 சென்னுக்குக் குறைந்ததாக, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) அறிக்கையை X தளத்தில் மேற்கோள் காட்டி ரஃபிசி பேசினார்.
நாட்டின் பணவீக்க விகிதம் 2 விழுக்காட்டுக்கும் கீழ் குறைந்திருந்தாலும், பொருட்களின் விலைவாசி உயர்வு தொடருவதாக சமூக வலைத்தளவாசிகள் அதிருப்தி தெரிவித்த நிலையில், ரஃபிசி வீடியோ வாயிலாக மேற்கண்ட விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
மாதா மாதம் சில பொருட்கள் விலையேற்றம் காணலாம், சில பொருட்களின் விலைக் குறையலாம்; மேலும் சில விலை மாறாமலிருக்கலாம்.
ஆனால், மடானி அரசாங்கத்துக்கு முன்பிருந்ததை விட தற்போது பணவீக்க விகிதம் குறைந்து காணப்படுவதை யாரும் மறுக்க முடியாதென ரஃபிசி கூறினார்.