
சீன பெருநாளை முன்னிட்டு, இன்று தொடங்கி இம்மாதம் 27-ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்படவுள்ள OPS BERSEPADU சோதனை நடவடிக்கை நெடுகிலும், பயணி போல பாசாங்கு செய்து விரைவுப் பேருந்துகளை சோதனையிடும் யுக்தியை JPJ சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் கையாளவுள்ளனர்.
பேருந்து நிறுவனங்களின் நடத்துனர்களும், ஓட்டுனர்களும், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதிச் செய்ய அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, தொடர்ந்து வலது புற சாலையில் பேருந்தைச் செலுத்துவது, 300 கிலோமீட்டருக்கு மேற்பட்ட அல்லது நான்கு மணி நேரத்திற்கும் கூடுதலான பயணங்களின் போது துணை ஓட்டுனரை வேலைக்கு அமர்த்தாதது, புகைப் பிடிப்பது, காலணி அணியாதது, கைப்பேசியை பயனடுத்துவது, பொது போக்குவரத்து சேவைக்கான PSV அனுமதியை வைத்திருக்காது ஆகிய குற்றங்கள் கண்காணிக்கப்படும் என சிலாங்கூர் மாநில சாலை போக்குவரத்து துறை தலைவர் டத்தோ கைருல் கார் யாஹ்யா தெரிவித்தார்.
சோதனை நடவடிக்கையின் போது, குற்றங்களை புரியும் ஓட்டுனர்களுக்கு நேரடியாக அபராதம் விதிக்கப்படும். அதற்காக நாடு முழுவதும் 325 சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.