கோலாலம்பூர், நவ 12 – கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென சாலையில் படுத்திருக்கும் காட்சியால் இணையவாசிகள் கொதிப்படைந்தனர். நல்ல வேளையாக நெடுஞ்சாலையில் நடக்கவிருந்த விபத்தை ஒரு வாகன ஓட்டி தனது விவேகமான நடவடிக்கையில் தவிர்த்துள்ளார்.
காரின் டேஷ் கேமராவில் படம் பிடிக்கப்பட்ட இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது. அது தொடர்பான காணொளி சனிக்கிழமை முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களின் கவனத்தை அது ஈர்த்துள்ளது.
கார் சீரான வேகத்தில் இடது பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் குதித்து சாலையில் படுத்திருந்தார். ஓர் ஓட்டுனரின் உடனடி கவனம் அந்த நபரையும் மற்ற வாகன ஓட்டிகளையும் தவிர்த்து காரை வலது பக்கம் திருப்பியது. எனினும் இந்த சம்பவம் எப்போது , எங்கு நடந்தது என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.
Mont Kiara பகுதியில் உள்ள கட்டிடங்களை தாண்டி , Jalan Dutaவுக்கு அருகில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஒருவர் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். சாலையில்
படுத்திருந்த அந்த நபரின் செயல் மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது என மற்ற இணையவாசிகள் தங்களது கோபத்தை வெளியிட்டனர்.
இந்த சம்பவம் மரணத்தை ஏற்படுத்தியிருந்தால் சம்பந்தப்பட்ட காரோட்டுனர் போலீஸ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார் என்றும் சில நெட்டிசன்கள் கருத்துரைத்தனர்