Latestமலேசியா

செந்தூல் ஸ்ரீநாக அம்மன் ஆலயத்தை உடைப்பதை முன்கூட்டியே அறிவிக்க தவறியது ஏன்? YTL நிறுவனத்தை எம்.பி பிரபாகரன் சாடினார்

கோலாலம்பூர், டிச 20 – செந்தூல் ஸ்ரீநாக அம்மன் ஆலயத்தை உடைப்பது குறித்து முன்கூட்டியே தெரிவிக்க தவறிய YTL மேம்பாட்டு நிறுவனத்தை பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் சாடினார். நீதிமன்றத்தில் ஆலய நிர்வாகம் தோல்வி கண்டுவிட்ட போதிலும் ஆலயத்தை உடைப்பதற்கு முன் கோயில் நிர்வாகத்திடம் முன்கூட்டியே கடிதம் வாயிலாக மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த மேம்பாட்டு நிறுவனம் செய்யத் தவறியது குறித்து தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக இன்று செந்தூல் பசாருக்கு அருகே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரபாகரன் தெரிவித்தார்.

செந்தூல் ஸ்ரீ நாக அம்மன் ஆலயத்திற்கு மாற்று இடம் மற்றும் 100,000 ரிங்கிட் இழப்பீடு கொடுப்பதற்கு YTL நிறுவனம் முன்வந்தனர் . இது தொடர்பான பேச்சு வார்த்தையில் தாமும் கலந்துகொண்டதாகவும் ஆனால் அதன் பிறகு ஆலய நிர்வாகம் இந்த விவகாரம் தொடர்பில் எந்தவொரு பதிலையும் தெரிவிக்கவிலை. இதற்கு முன் மேம்பாட்டு நிறுவனம் கேட்டுக்கொண்ட ஆவணங்கள் எதனையும் ஆலய நிர்வாகம் சமர்பிக்கவில்லை. இது ஒரு புறம் இருந்தாலும் 12 ஆண்டுகாலமாக நீடிக்கும் இந்த பிரச்சனை குறித்து ஆலய நிர்வாகம் ஒரு வழக்கறிஞரைக்கூட நியமிக்கவில்லை. எனினும் ஆலயம் விவகாரம் என்பதால் தாம் தொடர்ந்து பிரச்சனையை சுமுகமாக தீர்ப்பதற்காக மேம்பாட்டு நிறுவனத்துடன் பேச்சுக்களில் தாம் கலந்துகொண்டதோடு இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றால் நாம் தோல்வி கண்டு விடுவோம் என்பதால் மேம்பாட்டு நிறுவனம் வழங்கும் மாற்று நிலத்தையும் 100,000 ரிங்கிட்டையும் வாங்கிக்கொள்ளும்படி ஆலய நிர்வாகத்திடம் ஆலோசனை கூறியிருந்ததாகவும் பிரபாகரன் தெரிவித்தார். இதர நான்கு கோயில்கள் YTL நிறுவனம் வழங்க முன்வந்த மாற்று நிலத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஸ்ரீ நாக அம்மன் ஆலயம் என்ன முடிவு எடுத்தது என்று தமக்கு தெரியாது என்றும் பிராகரன் கூறினார்.

இதனிடையே இந்த ஆலய விவகாரம் தொடர்பில் மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து தாம் பணம் வாங்கிவிட்டதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டை கூறியவர்கள் ஆதாரங்களை வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்களுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என்றும் பிரபாகரன் கூறினார். அதே வேளையில் இந்த ஆலய விவகாரம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை YTL நிறுவனத்துடன் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். கோவில் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருப்பதால் அக்கூட்டத்தில் நிச்சயம் தாம் கலந்து கொள்ளப் போவதையும் பிரபாகரன் உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!