கோலாலம்பூர், பிப் 4 – சிலாங்கூர், அம்பாங், Kampung Tasek Permai- யில் அமைந்திருக்கும் மலேசிய ஜகத்குரு ஶ்ரீ ஆதிசங்கரர் திருமடம் பல்வேறு புதிய வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 35 லட்சம் ரிங்கிட் செலவில் , அந்த திருமடத்தின் புதிய மூன்று மாடி கட்டடம் இன்று அதிகாரப்பூர்மாக திறப்பு விழா கண்டது.
ஜகத்குரு ஶ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தின் கும்பாபிஷேகத்திலும் கட்டட திறப்பு விழாவிலும் கலந்து கொண்ட , மஇகாவின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணண், சமயக் கல்வியைப் போதிப்பதில் அத்திருமடம் ஆற்றி வரும் ஆத்மார்த்தமான சேவையைப் பாராட்டினார்.
இன்றைய தினம் 2001-இல் நிறுவப்பட்ட ஶ்ரீ ஆதிசங்கரர் திருமடம், தற்போது குளிர் சாதன வசதியைக் கொண்ட 3 மாடிக் கட்டடத்தில் மண்டபம், சமய ஆசிரியர்களுக்கான தங்கும் விடுதி, மாணவர் தங்கும் விடுதி ஆகிய வசதிகளைப் பெற்றிருக்கின்றது.
அத்திருமடத்தில், சமய வகுப்புகளுடன், பரதம், சங்கீதம், யோகா, தமிழ் பாலர் பள்ளி, தேவார திருமுறை வகுப்புகள் ஆகியவை நடத்தப்படுகின்றன.