
கோலாலம்பூர், பிப்ரவரி-5 – “சொல்லிப் பார்த்தோம், எழுதிப் பார்த்தோம், கெஞ்சிப் பார்த்தோம்… எதுவுமே நடக்கவில்லை. கடைசியில் நாங்களே களத்தில் இறங்கி விட்டோம்”
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர்களில் ஒருவரான டத்தோ என். சிவகுமார் விரக்தியில் கூறிய வார்த்தைகள் அவை.
பத்து மலை ஆற்றங்கரைப் பகுதியில் தார் சாலைப் போடப்படுவதற்காக தாங்கள் எடுத்த பல்வேறு முயற்சிகள் குறித்து அவர் அவ்வாறு சொன்னார்.
அந்த இடம் தேவஸ்தானத்திற்குச் சொந்தமானது அல்ல; எனவே தான் அனைத்துத் தரப்பிடமும் அதற்கு விண்ணப்பித்துப் பார்த்து விட்டோம்.
ஆனால் கோரிக்கைக்கு அதிகாரத் தரப்புகள் செவி சாய்க்காத நிலையில், தேவஸ்தானமே சொந்த முயற்சியில் இறங்கியதாக டத்தோ சிவகுமார் சொன்னார்.
அதன் பலனாக, பிரபல தொழில் அதிபர் விவேக் ஆதரவில் நேற்று பத்து மலை ஆற்றங்கரையில் தார் சாலைப் போடப்பட்டது.
ஆற்றங்கரையிலிருந்து குகைக் கோயில் நோக்கி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக தார் சாலைப் போடப்பட்டதாக, தேவஸ்தானத்தின் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.
தார் சாலைப் போடப்படும் பணிகளை தொழிலதிபர் விவேக்குடன் மேற்பார்வையிட்ட போது அவர் அவ்வாறு சொன்னார்.