
கூச்சிங், ஏப் 27 – பள்ளிகளில் பிள்ளைகள் கட்டாயமாக முகக் கவரிகளை அணிய வேண்டிய அவசியமில்லையென மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் முருகராஜ் ராஜதுரை கூறியுள்ளார். நோய்க்கான அறிகுறி மற்றும் மருத்துவ ரீதியில் பாதிக்கப்பட்ட அல்லது விரைவில் கோவிட் தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் தரப்பை சேர்ந்த பள்ளிப் பிள்ளைகள் மட்டும் முகக் கவரி அணிவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்தார். முகக் கவரிகளை அணிவதைவிட மாணவர்கள் தங்களது கைகளை அடிக்கடி கழுவும் வழக்கத்தை கொண்டிருப்பதன் மூலம் கோவிட் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என டாக்டர் முருகராஜ் தெரிவித்தார்.
தங்களது முகத்தில் கைகள் தொடாமல் அடிக்கடி கைகளை கழுவ வேண்டிய அவசியத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நினைவுறுத்தி வரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். நோய்க்கான அறிகுறி கொண்ட மாணவர்கள் மட்டுமே முகக் கவரியை அணிந்து கொள்ள வேண்டும் என்பதோடு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் சுகாதார அமைச்சின் வழிமுறைக்கு ஏற்ப தனிமைப்படுத்தப்பட வேண்டும் என முருகராஜ் வலியுறுத்தினார்.