
கோலாலம்பூர், செப்டம்பர் 5 – பொதுவாகவே ஆரம்பப் பள்ளியில் அழிப்பான் விளையாட்டு, லா தா லி லா தோம் , பேப்பர் விளையாட்டு போன்ற விளையாட்டுகளை நண்பர்களுடன் விளையாடி இருப்போம்.
ஆனால், அந்த விளையாட்டுகள் எல்லாம் பள்ளியில் நண்பர்களுடன் சூதாட்டமாக விளையாடி அதன் மூலம் 8 வயது மாணவி ஒருவர் 1550 ரிங்கிட் பணம் ஈட்டியுள்ளார் என்றால் நம்புவீர்களா?
இப்படி ஒரு அதிர்ச்சி தகவலைத்தான் கண்டறிந்து அதிர்ந்து போயுள்ளார் தாய் ஒருவர்.
பள்ளி உபகரணப் பொருட்களை விற்கும் கடைக்குச் சென்ற போது, அங்கு வைக்கப்பட்டிருந்த 899 ரிங்கிட் விலை உயர்ந்த புத்தகப் பையை காட்டி அதனை வாங்க ஆர்வம் காட்டியிருக்கின்றார் அந்த மாணவி. அதோடு, அதற்கு தேவையான பணம் தம்மிடம் இருப்பதாக கூறியதோடு, தன் பையிலிருந்த 1550 ரிங்கிட் தொகையையும் எடுத்து அம்மாணவி நீட்டிய போது, அந்த தாய் வாயடைத்து போனதாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அனைத்துலக பள்ளியில் பயிலும் அம்மாணவிக்கு, அவரது தாய் வாரம்தோறும் 50 ரிங்கிட்டை கைச்செலவுக்கு தருவது வழக்கமாகும்.
இந்நிலையில், அவ்வளவு பெரிய தொகையை தனது கணவர் மகளுக்கு வழங்கி இருக்கலாம் என விசாரித்த போது, அவர் இல்லை என கூறி விடவே அப்பெண் அதிர்ச்சிக்குள்ளானார்.
இந்நிலையில், சூதாட்டம் வழியாக தனது மகள் அந்த பணத்தை ஈட்டியது தெரிய வந்த போது, அந்த தாய் மேலும் அதிர்ந்து போனார்.
இவ்வேளையில், அந்த பதிவுக்கு இணையவாசிகள் கலவையாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் அந்த சிறுமியின் திறமையை பாராட்டிய வேளை ; மேலும் சிலர் அதனை கடுமையாக கருதுவதோடு, அதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து அந்த சிறுமியை விலக்கி வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.