
கோலாலம்பூர், மார்ச் 23 – பள்ளிவாசலையும், Surau – தொழுகை இடங்களையும், அரசியல் தளங்களாக பயன்படுத்தக் கூடாது என ஆட்சியாளர்கள் வெளியிட்டிருக்கும் உத்தரவை மீறி நடந்துக் கொள்ள வேண்டாமென , அரசியல்வாதிகளுக்கு , ஜோகூர் சுல்தான் கடும் எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.
அரசியல்வாதிகள், அன்றாட தேவைகளைப் பூர்த்திச் செய்ய சிரமப்படும் மக்களின் பிரச்சனைகளைக் களைவதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். குறிப்பாக ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பிரச்சனையை எதிர்கொள்ள அரசியல்வாதிகள் என்ன நடவடிக்கையை எடுத்துள்ளனர் என அவர் கேள்வி எழுப்பினார்.
இன –சமய விவகாரங்களை சர்ச்சையாக்கி மக்களை பிளவுப்படுத்துவதை நிறுத்தி விட்டு, நல்லிணக்கத்தை ஏற்படுத்த என்ன முயற்சிகளை அவர்கள் எடுத்துள்ளனர் என்பதை தாம் அறியவும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பள்ளிவாசலிலும், Surau-விலும் அரசியல்வாதிகள் உரையாற்ற விதிக்கப்பட்ட உத்தரவை மீறி சிலர் நடந்துக் கொள்வதை தாம் அறிவதாகவும் அவர் கூறினார்.
எனவே, ஜோகூரில் இனியும் அந்த உத்தரவை மீறி நடந்து கொள்ள யாருக்கும் தைரியம் இருந்தால் , முயற்சித்து பாருங்கள்; பிறகு தெரியும் என்னென்ன விளைவுகள் காத்திருக்கின்றன என, ஜோகூர் சுல்தான் , Sultan Ibrahim எச்சரித்திருக்கின்றார்.