
கோலாலம்பூர், ஜன 24 – SPM தேர்வை முன்னிட்டு முஸ்லீம் மாணவர்களுக்கு மட்டுமே பயிலறங்கை நடத்தியதாக கூறப்படும் ஜோகூரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றை விசாரிப்பது குறித்து அம்மாநில கல்வித் துறையே முடிவு செய்யுமென கல்வியமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.
இஸ்லாமிய பாடத்துக்கான SPM பயிலறங்கு என குறிப்பிட்டு ரசாயனம், கூடுதல் கணிதம் ஆகியவற்றுக்கான பாடங்களுக்கும் அப்பள்ளிக்கூடம் பயிற்சி அளித்துள்ளது. ஆனால் அது குறித்து முஸ்லீம் அல்லாத மாணவர்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட மாணவர்களின் சில பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வட்சாப் குழுவில் கேள்வி கேட்டிருக்கின்றனர். உடனடியாக, அப்பள்ளிக்கூட தலைமையாசிரியர் அந்த வட்சாப் குழுவில் விவாதங்களை முடக்கியதோடு, பள்ளி நிர்வாகத்தினர் மட்டுமே அக்குழுவில் தகவல் அனுப்ப அனுமதித்திருந்தார்.
அதன் பின்னர் அந்த விவகாரம் கல்வியமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.