கோலாலம்பூர், ஏப்ரல் 23 – ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, தனது சக பள்ளி தோழியை பாலியல் பலாத்காரம் செய்தது உட்பட மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.
அக்குற்றங்கள் நிகழ்ந்த போது, குற்றம் சாட்டப்பட்டவருக்கும், பாதிக்கப்பட்டவருக்கும் வெறும் 15 வயது மட்டுமே.
அதனை கருத்தில் கொண்டு, அந்த தண்டனை நிலைநிறுத்தப்படுவதாக, டத்தோ ஹதாரியா சையிட் இஸ்மாயில் தலைமையிலான மூன்று மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு ஒருமனதாக அறிவித்தது.
அவ்வழக்கு தொடர்பில், இதற்கு முன் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை. அதனால், அந்த தீர்ப்பு நிலைநிறுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதனால், அவ்வழக்கு தொடர்பில், குற்றம்சாட்டப்பட்டவர் செய்திருந்த மேல்முறையீடு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
2017-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 19-ஆம் தேதி, மாலை மணி மூன்று வாக்கில், அம்பாங்கிலுள்ள, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், குற்றம்சாட்டப்பட்டவர், வன்முறையை பயன்படுத்தி சக பள்ளி தோழியை கற்பழித்துள்ளார்.
சம்பவத்தின் போது, தாம் சம்பவ இடத்தில் இல்லை என அவர் வெறும் வாய்மொழியாக மட்டுமே கூறியுள்ளார். அதற்கான ஆதாரம் எதுவும் முன் வைக்கப்படவில்லை. அதனால், அது ஒரு போலியான வாக்குமூலம் என்பது தெளிவாகவும், வெளிப்படையாகவும் தெரிவதால், அந்த வாதம் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.