
புத்ராஜெயா, ஜூன் 13 – ஒவ்வொரு வருடமும் பள்ளிப்படிப்பை முடித்து வெளிவரும் சுமார் 20,000 மாணவர்களுக்கு தொழிற்திறன் பயிற்சியளிக்க 200 நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது.
“தொழில்நிறுவனங்களில் கல்வி” எனும் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படும் என பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி அறிவித்துள்ளார்.
SPM முடித்த மாணவர்களுக்கு 18 மாதக்கால பயிற்சி என்ற அடிப்படையில் இத்திட்டம் அமையவுள்ளது. இப்பயிற்சியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு மலேசிய தொழிற்திறன் சான்றிதழ் வழங்கப்படும்.
பள்ளி முடித்து 2 அல்லது 3 வருடங்கள் மேற்கல்வியை முடித்தப் பின்னர் வேலைச் சந்தைக்கு செல்வதைவிட பள்ளிப் படிப்பை முடித்தவுடனே வேலைச் சந்தையில் இணையும் இத்திட்டம் அரிய வாய்ப்பாக மாணவர்களுக்கு அமைகிறது.
இதன்வழி வேலை செய்துக் கொண்டே அவர்கள் மேற்கல்வியையும் தொடரலாம். இது போன்ற வாய்ப்பைத்தான் இன்றைய இளைஞர்களும் எதிர்பார்க்கின்றனர்.
இத்திட்டத்தில் பங்குபெறும் தர்ப்புக்கு சில சலுகைகளையும் அரசாங்கம் இதன் அறிமுக விழாவில் அறிவிக்கும் என ஊடகவியலாளர் சந்திப்பில் ரபிசி கூறினார்.
இதன் முதல் கட்டமாக 9 உள்நாட்டு மற்றும் ஒரு வெளிநாட்டு நிறுவனம் பரிச்சாத்திய பயிற்சியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கூறிய அவர், அந்த 10 நிறுவனங்களும் ஆட்டோமோட்டிவ், செமிகொண்டக்டர், உணவு, ஏரோஸ்பேஸ், செம்பனை எண்ணெய் உற்பத்தி ஆகிய துறைகளை உள்ளடக்கியிருப்பாதாக தெரிவித்தார்.