பள்ளி பஸ் கட்டணம் இப்போதைக்கு உயர்த்தப்படாது – டாக்டர் முருகமலை

ஜோகூர் பாரு, ஜன 3 – பள்ளி பஸ் கட்டணம் இப்போதைக்கு உயர்த்தப்படாது என மலேசிய தேசிய பள்ளி பேருந்து உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் சங்கத்தின் தலைவர் டாக்டர் முருகமலை தெரிவித்தார். பள்ளி பஸ் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள் பெற்றோர்களுடன் பேச்சு நடத்தி இனக்கத்தின்பேரிலேயே பள்ளி பஸ் கட்டணம் குறித்து முடிவு செய்யும்படி ஏற்கனவே அரசாங்கம் கூறியிருப்பதால் இப்போதைக்கு பள்ளி பஸ் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லையென முருகமலை கூறினார். பள்ளி பஸ் கட்டணம் மாதந்திற்கு 300 ரிங்கிட்வரை உயர்க்கூடும் என அண்மையில் ஊடகங்களில் வெளியான தகவலை அவர் மறுத்தார்.
50 ரிங்கிட்வரை பள்ளி பஸ் கட்டணத்தை உயர்த்துவது கூட சாத்தியமில்லை. மக்களும் சிரமத்தில் இருக்கிறார்கள் என்பதை நாங்களும் உணர்ந்துள்ளோம், பள்ளி பஸ் கட்டணம் தொடர்பாக இன்னும் தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை. புதிய பள்ளி தவணைக் காலம் எதிர்வரும் மார்ச் மாதம்தான் தொடங்கவிருக்கிறது . அப்போதுதான் இது குறித்து தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படலாம் . பள்ளி பஸ்களின் பராமரிப்பு கை செலவினம் உயர்ந்துவிட்டது. உண்மையை சொல்லப்போனால் இந்த துறையில் வருமானம் குறைந்துவிட்டது. வருமானத்தைவிட செலவுதான் அதிகமாக இருக்கிறது. பள்ளி பஸ்களுக்கு அரசாங்கம் உதவித் தொகையை வழங்கினால் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற நிலை இருப்பதால் அரசாங்கம் இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஜோகூர் மாநில பள்ளி பேருந்துஉரிமையாளர் மற்றும் ஓட்டுனர் சங்கத்தின் தலைவருமான முருகமலை கூறினார்.