புத்ராஜெயா, ஜனவரி-10, 2024/2025 கல்வியாண்டில் முதலாம் வகுப்பு முதல் நான்காம் படிவம் வரையில் பயிலும் மாணவர்களுக்கான 150 ரிங்கிட் பள்ளித் தொடக்க உதவி நிதி, வரும் ஜனவரி 13 தொடங்கி விநியோகிக்கப்படும்.
அதே சமயம், 2025/2026 புதியக் கல்வித் தவணையில் முதலாமாண்டில் காலடி வைக்கும் மாணவர்களுக்கும், இரண்டாம் பருவத்தில் நுழையும் 6-ம் படிவ மாணவர்களுக்கும் பிப்ரவரி 16 தொடங்கி அந்நிதி விநியோகம் செய்யப்படும்.
ஆறாம் படிவத்தில் காலடி வைக்கும் மாணவர்கள் வரும் ஜூலை 1 முதல் அந்த உதவி நிதியைப் பெறத் தொடங்குவர் என, கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
BAP என சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப் பள்ளித் தொடக்க உதவி நிதி இவ்வாண்டு முதன் முறையாக ஆறாம் படிவ மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
One-off அதாவது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் இந்த 150 ரிங்கிட் உதவி, நாடு முழுவதும் 5.2 மில்லியன் மாணவர்களுக்கு பயன் தருமென அமைச்சு கூறியது.
பள்ளி நிர்வாகங்கள் 3 வழிகளில் அவ்வுதவி நிதியை மாணவர்களிடத்தில் சேர்ப்பிக்கும்.
பெற்றோர்களிடம் ரொக்கமாக வழங்குவதல், நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்குகளிலோ அல்லது பெற்றோர்களின் வங்கிக் கணக்குகளிலோ பணம் போடுவதே அவ்வழிமுறைகளாகும்.